உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நெரிசலை குறைக்க நடவடிக்கை தேவை

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நெரிசலை குறைக்க நடவடிக்கை தேவை

விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தப்படும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் கூட்ட நெரிசலால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசு அதிகாரிகளுக்கும் குடிமக்களுக்கும் இடையே நேரடி தொடர்பை எளிதாக்குவதன் மூலம், பொதுமக்களின் குறைகள் மற்றும் தேவைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யவே மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.அரசின் 15 துறைகள் மூலம் 44 அரசு சேவைகளை மக்கள் எளிதாக பெறுவதற்காக இந்த திட்டத்தில் மனு அளிக்கலாம்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் 96 இடங்களில் இந்த முகாம்களை நடத்த திட்டமிட்டு, இதுவரை 25க்கும் மேற்பட்ட முகாம்களை நடத்தி விட்டனர். இந்த முகாம்கள் அனைத்து துறையினரும் கணினியுடன் ஆஜராகி பொது மக்களிடம் மனுக்களை பெறுகின்றனர். ஒவ்வொரு முகாமிலும் 6 முதல் 7 ஊராட்சிகளைச் சேர்த்து முகாம் நடத்துகின்றனர். இதில் சில ஊராட்சிகள் அதிக மக்கள் தொகை கொண்டவையாக உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் முகாம் நடத்தாமல் ஊராட்சி அடிப்படையில் முகாம் நடத்தும் போது சில இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மக்கள் தொகை அதிகம் உள்ள ஊராட்சிகள் இடம் பெற்று விடுகின்றன.கிராமங்களில் உள்ள சிறிய திருமண மண்டபங்கள், பள்ளிக் கூடங்களில் சிறிய இடத்தில் முகாமை நடத்துகின்றனர். சிறிய இடத்தில் 15 அரசுத் துறையினர் தங்கள் பரிவாரத்துடன் இடம் பிடித்ததும் முகாமில் உள்ள இடம் நிறைந்து விடுகிறது. இதில் மக்கள் வந்து செல்ல போதிய இடம் இருப்பதில்லை. சந்தை கடைகளை விட மோசமான நெரிசலில் நின்று பொது மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து அதிகாரிகளை முற்றுகையிடுவதால் அவர்கள், அவசர கதியில் மனுக்களைப் பெறுகின்றனர். மனுக்களை சரிபார்க்கவும், போதிய தகவல்களை பெறவும் அதிகாரிகளுக்கு நேரம் இருப்பதில்லை. பொது மக்களை அங்கிருந்து அனுப்புவதிலேயே அதிகாரிகள் குறியாக உள்ளனர். பல இடங்களில் முகாம்களில் வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டில் எந்த தகவலும் இல்லாமல் கொடுத்துள்ளனர். இதனால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் பொது மக்களை மீண்டும், மீண்டும் விசாரணைக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்படும். இல்லையெனில் போதிய தகவல்கள் இல்லாமல் மனுக்கள் நிராகரிக்கப்படும் சூழல் ஏற்படும்.எனவே கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு குறைந்த அளவிலான ஊராட்சிகளை இணைத்து முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், இந்த முகாம்கள் மூலம் மக்களுக்கு முழுமையான பலன் கிடைக்காமல் ஒப்புக்கு நடத்தப்படும் முகாம்களாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மாறிவிடும்-நமது நிருபர்-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்