| ADDED : மே 09, 2024 04:16 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் திடீரென இடி, மின்னலோடு பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கத்தரி துவங்கியதை யொட்டி, கடந்த மூன்று தினங்களாக சூட்டெரிக்கும் அனலால் பொதுமக்கள் வெளியே செல்லவே சிரமப்பட்டனர்.இந்த சூழலில், நேற்று காலை 6:30 மணிக்கு கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. 7:00 மணிக்கு பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்ய துவங்கியது. இந்த மழை ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால், விழுப்புரம் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கீழ்பெரும்பாக்கம் தரைபாலத்தில் தண்ணீர் குளமாக தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.அதே போல், புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் சூழ்ந்ததால் பயணிகள் உள்ளே மற்றும் வெளியே செல்ல முடியாமல் அவதியடைந்ததோடு, பஸ்களை வெளியே ஓட்டி செல்லவும் டிரைவர்கள் சிரமப்பட்டனர். விழுப்புரம், வழுதரெட்டி பகுதியில் ஒரு வீட்டின் பின்புறமுள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்தது. கீழ்ப்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கி போக்குவரத்து தடைபட்டது. திடீர் மழையால் கோடை வெயிலின் உஷ்ணம் தணிந்து மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.