திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே, இரவில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கண்ணன், 40; விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம், அதே பகுதியில் உள்ளது.எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் சின்னப்பன், 38; கிரேன் ஆபரேட்டர்.இவர் வாயிலாக, பெரியகுறுக்கையை சேர்ந்த தணிகாசலம், 48; நரிப்பாளையம் ஹரிகிருஷ்ணன், 40; நெய்வனை முருகன், 38; ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் கண்ணனின் விவசாய நிலத்தில் 100 அடி ஆழத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, திடீரென கிணற்றின் மேல் கிரேனில் ரோப் அறுந்து, அதில் இணைக்கப்பட்டிருந்த பக்கெட் கிணற்றுக்குள் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் தணிகாசலம், ஹரிகிருஷ்ணன், முருகன் ஆகிய 3 பேரும் இறந்ததாக திருவெண்ணெய்நல்லுார் போலீசுக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மூவரின் உடல்களை கிரேன் மூலம் மீட்டனர்.அப்போது அங்கு வந்திருந்த இறந்தவர்களின் உறவினர்கள், ''மூன்று பேரின் உடல்களில் சில இடங்களில் கருகிய நிலையில் காயங்கள் உள்ளது. ரோப் அறுந்து பக்கெட் விழுந்ததால் அவர்கள் இறக்கவில்லை. வெடி மருந்து வெடித்து இறந்திருப்பது போல் தெரிகிறது. இதனால், 3 பேரின் சாவில் சந்தேகம் உள்ளது'' என கூறி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், இரவு 10:30 மணியளவில் மடப்பட்டு - திருக்கோவிலுார் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், 'சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறியதை ஏற்று கலைந்து சென்றனர்.அதை தொடர்ந்து, 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நேற்று காலை, சம்பவம் நடந்த நிலத்தின் உரிமையாளர் கண்ணன் மற்றும் கிரேன் ஆபரேட்டர் சின்னப்பன் ஆகிய இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.இறந்த 3 பேரின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே, உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து, நிலத்தின் உரிமையாளர் கண்ணன், 40; கிரேன் ஆபரேட்டர் சின்னப்பன், 38; ஆகிய இருவரையும் கைது செய்து செய்தனர்.