| ADDED : ஏப் 28, 2024 06:17 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததால் டாக்டரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.செஞ்சி அடுத்த கம்மந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார், 28: இன்ஜினியர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபரிந்து வருகிறார். இவரது மனைவி திவ்யா, 24; நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் முதல் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு அங்கு அறுவை சிகிச்சையில் பெண் குழந்தை பிறந்தது.அப்போது திவ்யாவுக்கு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் இரவு 7:00 மணியளவில் இறந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஏற்கனவே திண்டிவனத்தில் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் அலட்சியமான சிகிச்சையால்தான் அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. அதன் பின் முண்டியம்பாக்கத்தில் சேர்க்கப்பட்டும், முறையான சிகிச்சை அளிக்காததால் இறந்ததாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனை எதிரே 7:20 மணியளவில் சென்னை - திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த போலீசார் சர்வீஸ் சாலையில் மாற்றி அனுப்பினர்.ஏ.டி.எஸ்.பி., திருமால், இன்ஸ்பெக்டர்கள் வசந்த், முருகன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து, 8:00 மணியளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.