| ADDED : டிச 05, 2025 06:34 AM
விழுப்புரம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, விழுப்புரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 115 பேரை போலீசார் கைது செய்தனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, அரசு பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். விடுமுறை தினங்களில் ஆய்வு கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் முன் நேற்று காலை போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுதாகர், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்க பொதுச் செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோ பிரபு, இணைச் செயலாளர் பார்த்திபன் உட்பட நிர்வாகிகள் பலர் பங் கேற்றனர். போராட்டத்தை தொடர்ந்து, நிர்வாகிகள், விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் காலை 10:50 மணிக்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த ஏ.டி.எஸ்.பி., தினகரன் தலைமையிலான போலீசார், மறியல் செய்த 63 பெண்கள் உட்பட 151 பேரை கைது செய்தனர். இதனால், திருச்சி நெடுஞ்சாலையில் 10 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.