| ADDED : பிப் 13, 2024 04:44 AM
விக்கிரவாண்டி,: விக்கிரவாண்டி அருகே பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் இறந்தனர்.விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கம், புதுகாலனியைச் சேர்ந்தவர் ராஜி, 42; பழைய பைக்குகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். பில்லுாரைச் சேர்ந்தவர் பிரபாகரன், 45; புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். நண்பர்களான இருவரும், நேற்று முன்தினம் இரவு ராஜிக்கு சொந்தமான ஹோண்டா ஷைன் பைக்கில், முண்டியம்பாக்கத்தில் நடந்த மஞ்சள் நீர் விழாவில் பங்கேற்று, 10:30 மணி அளவில் வீட்டுக்கு புறப்பட்டனர். பைக்கை ராஜி ஓட்டினார்.முண்டியம்பாக்கம் பஸ் நிலையம் அருகே, சர்வீஸ் சாலையிலிருந்து புறவழிச் சாலையில் ஏறியபோது, சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற அரசு பஸ் பைக் மீது மோதியது.இதில், பைக்குடன் இருவரும் பஸ்சின் அடியில் சிக்கினர். ராஜி சம்பவ இடத்திலேயே இறந்தார். பிரபாகரன் தலையில் பலத்த காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்தார்.விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.