உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஆரோபுட் தனியார் தொழிற்சாலை எதிரே வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அதிகரிப்பு

 ஆரோபுட் தனியார் தொழிற்சாலை எதிரே வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அதிகரிப்பு

வானுார்: ஆரோபுட் தனியார் தொழிற்சாலை எதிரில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. புதுச்சேரியில் இருந்து திண்டிவனத்திற்கு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வழியாக கடந்த காலங்களில் ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. தற்போது, புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதால், அதிகளவில் வாகனங்கள் அந்த வழியாக கடந்து செல்கிறது. இருப்பினும், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பழைய சாலை வழியாகத்தான் செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. குறிப்பாக புள்ளிச்சப்பள்ளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆரோபுட் பிஸ்கெட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதை சுற்றி சிறு தொழிற்சாலைகளும் உள்ளன. இங்கு தினந்தோறும் வரும் டாராஸ் லாரிகள் நிறுத்துவதற்கு இடம் இல்லாமல், சாலையில் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால், விபத்துகள் அதிகரித்து வருகிறது. எதிர் எதிரே வரும் வாாகனங்களுக்கு வழியில்லாமல் போவதால், விபத்துகள் தொடர் கதையாக உள்ளன. எனவே போலீசார் அப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி மாற்று இடத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !