உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுடுகாட்டு பாதைக்காக ரூ.10.25 லட்சத்தில் இடம் வாங்கி பத்திரத்தை வழங்கிய சேர்மன் மரக்காணம் அருகே ஆதிதிராவிட மக்கள் நெகிழ்ச்சி

சுடுகாட்டு பாதைக்காக ரூ.10.25 லட்சத்தில் இடம் வாங்கி பத்திரத்தை வழங்கிய சேர்மன் மரக்காணம் அருகே ஆதிதிராவிட மக்கள் நெகிழ்ச்சி

மரக்காணம்: மரக்காணம் அடுத்த ஆட்சிக்காடு கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கு சுடுகாட்டுப்பாதை அமைக்க சேர்மன் 10.25 லட்சம் ரூபாய்க்கு இடம் வாங்கி பத்திரம் பதிவு செய்து, கிராம மக்களிடம் அளித்தார். மரக்காணம் அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஆட்சிக்காடு 3வது வார்டில் 200க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து கிழக்கு கடற்கரையோரம் சுடுகாடு உள்ளது. ஆட்சிக்காட்டில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தனியாருக்கு சொந்தமான இடத்தின் வழியாக சுடுகாட்டிற்கு செல்ல வேண்டும். மேலும் பருவ மழை காலத்தில் அந்தப் பகுதியில் 5 அடி அளவில் மழைநீர் தேங்குகிறது. இதனால், தண்ணீரில் நீந்தியபடி இறந்தவர்களின் உடலை சுமந்து செல்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள், 'எங்கள் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல 100 ஆண்டிற்கு மேலாக வழி இல்லை. எங்களுக்கு புதிய வழியை அரசு அமைத்து தரவேண்டும் என மாவட்ட, ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் இதுநாள் வரை நடவடிக்கை இல்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்' என மரக்காணம் சேர்மன் தயாளனிடம் மனு கொடுத்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சேர்மன் தயாளன் தனது சொந்த பணம் 10.25 லட்சம் ரூபாய் மதிப்பில் தனிநபருக்கு சொந்தமான இடத்தினை வாங்கி ஆட்சிக்காடு ஆதிதிராவிடர் சுடுகாட்டு பொது வழிக்காக என பத்திரப்பதிவு செய்தார். பின் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆட்சிக்காடு கிராமமக்களிடம் பத்திரத்தை ஒப்படைத்தார். பத்திரத்தை பெற்ற மக்கள் சேர்மனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை