| ADDED : நவ 20, 2025 05:34 AM
விழுப்புரம்: ஆசிய மூத்தோர் தடகள போட்டியில், விழுப்புரம் மாவட்ட வீரர்கள் வெள்ளி, வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இந்திய மாஸ்டர் தடகள சங்கம் சார்பில், சென்னை நேரு ஸ்டேடியத்தில் 23 வது ஆசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், இந்தியா, ஈரான், மலேசியா உள்ளிட்ட 30 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இந்திய அணி சார்பில், விழுப்புரம் டவுன் காவல் நிலைய போலீஸ் ஏட்டு பிரகாஷ், திண்டிவனம் போலீஸ் ஏட்டு அன்பரசன், விக்கிரவாண்டி டிராபிக் ஏட்டு இளங்கோவன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்வேலன், சின்னப்பராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், வட்டு எறிதல் போட்டியில் பிரகாஷ் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். தடகளத்தில் 3000 மீட்டர் போட்டியில் சின்னப்பராஜ் வெண்கல பதக்கம் வென்றார். செந்தில்வேலன் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற வீரர்களை எஸ்.பி., சரவணன் பாராட்டினார்.