விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வெடிபொருள் தயாரிப்பு இடங்களை வருவாய்த்துறை, போலீசார், தீயணைப்புத் துறையினர் கூட்டு தணிக்கை செய்து, குறைபாடுகள் இருந்தால் உரிமத்தை ரத்து செய்ய கலெக்டர் அறிவுறுத்தினார்.அருகே பட்டாசு தயாரிக்கும் இடத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் தீ மற்றும் தொழில் துறை பாதுகாப்பு குழு ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எஸ்.பி., தீபக் சிவாச் மற்றும் முக்கிய துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.மாவட்டத்தில், வெடிபொருள் சட்ட விதிகள் 2008ன் கீழ், நிரந்தரமான வெடிபொருள் உரிம நிறுவனங்களில் ஆய்வு செய்தல். வெடிபொருள் தயார் செய்வதற்கான உரிமம், வெடிபொருள் தடையின்மை சான்றுக்கான உரிமம்.வெடிபொருள் விற்பனை செய்வதற்கான உரிமங்கள் வைத்துள்ளவர்கள் தொடர்பாகவும், தமிழக அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடுத்துறை அமைக்கப்பட்ட 'மாவட்ட தீ மற்றும் தொழில் துறை பாதுகாப்பு குழுவின் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.இந்த கூட்டத்தில், தமிழக அரசின் வெடிபொருள் சட்ட விதிகள்படி, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையான, வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, வெடிபொருள் சம்மந்தமாக அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் செயல்படுத்திட வேண்டும்.வெடிபொருள் உரிமம் பெற்ற இடத்தினை வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள், கூட்டு புல தணிக்கை செய்து, அறிக்கை அளிக்க வேண்டும்.குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அதற்கான உரிமத்தினை ரத்து செய்திட வேண்டும். உரிமம் இல்லாமல் செயல்படும் இடங்களைக் கண்டறிந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில், வெடிவிபத்து அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், கலந்தாலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, திண்டிவனம் சப் கலெக்டர் (பொறுப்பு) சந்திரசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.