உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனுமதியின்றி பனை மரங்கள் அழிப்பு! கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

அனுமதியின்றி பனை மரங்கள் அழிப்பு! கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

திண்டிவனம் : திண்டிவனம் அருகே அனுமதியின்றி பனை மரங்கள் வேருடன் பிடுங்கி அழிக்கப்பட்டது குறித்து விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.இந்திய அளவில் 8.59 கோடி பனைமரங்கள் உள்ளன. இதில் 5.10 கோடி மரங்கள் தமிழகத்தில்தான் இருப்பதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.ஆனால், அதிகளவில் பனை மரங்கள் வெட்டப்பட்டதால், தற்போது 2.50 கோடியாக குறைந்து போனதாக கூறப்படுகிறது.பனை மரத்திலிருந்து நுங்கு, பதனீர், பனம் பழம், பனங்கருப்பட்டி, பனை வெல்லம், பனை விசிறி, பனை ஓலையில் இருந்து செய்யப்படும் சாமான்கள் என பல வகைகளில் பயன்படுத்தக் கூடிய பொருள்களை வாரி வழங்குவதால், தமிழகத்தின் கற்பக விருட்சமாக பனை மரம் உள்ளது.இந்த அளவிற்கு முக்கியத்தும் வாய்ந்த பனை மரத்தை கலெக்டர் அனுமதியின்றி வெட்டக்கூடாது என மதுரை ஐகோர்ட் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளது.இந்த தீர்ப்பை மீறும் வகையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பம் - தீவனுார் கூட்ரோடு அருகே பிளாட் போடுவதற்கு தடையாக இருந்ததாக கலெக்டரின் அனுமதியின்றி மரங்களுக்கு தீ வைத்தும், 30 பனை மரங்களை அடியோடும் வெட்டி சாய்த்துள்ளனர்.இதுகுறித்து திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்துள்ளனர். மேல்பேரடிக்குப்பம் வி.ஏ.ஓ.,வும் தாசில்தாரிடம் அறிக்கை கொடுத்துள்ளார்.மேலும், வெட்டப்பட்ட பனை மரங்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாபு, ரோஷணை போலீசிலும் புகார் அளித்துள்ளார்.கஜா புயலின்போது, அதன் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அத்தனை மரங்களும் மண்ணோடு சரிந்தன. வானுயர்ந்து நின்ற தென்னை மரங்கள் அடியோடு மண்ணில் சரிந்த போதும், பெரிய புயலையும் கடந்து கம்பீரமாக விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது பனை மரங்கள் மட்டும்தான்.வரும் காலங்களில் உரிய அனுமதியின்றி பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை