விழுப்புரம் கோ ஆப்டெக்சில் தீபாவளி தள்ளுபடி விற்பனை
விழுப்புரம் : விழுப்புரம் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழா நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்து கூறுகையில், 'கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு, மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருப்புவனம் பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூரைநாடு புடவைகள், பருத்தி சேலைகள், போர்வைகள், மாப்பிள்ளை செட் உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு உள்ளன. இந்த ஆண்டு விழுப்புரம் விற்பனை நிலையத்திற்கு 60 லட்சமும், திண்டிவனம் விற்பனை நிலையத்திற்கு 23 லட்சம் ரூபாயும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு தள்ளுபடி 30 சதவீத வசதியுடன், அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் வசதியும் அளிக்கப்படுகிறது' என்றார். கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் மாணிக்கம், துணை மேலாளர் பிரேம்குமார் மற்றும் விற்பனை நிலைய ஊழியர்கள் பங்கேற்றனர்.