தி.மு.க., வாக்குறுதியை நிறைவேற்றிட ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு தீர்மானம்
விழுப்புரம்: தமிழக பள்ளிக் கல்வி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாநில தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் பார்த்தசாரதி, மகளிரணி செயலாளர் புவனேஸ்வரி, செயற்குழு உறுப்பினர் சாமுவேல்துரை, செய்தி தொடர்பாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் சுப்ரமணியன் வரவேற்றார்.பொதுச்செயலாளர் துரை விளக்கவுரையும், நிறுவனர் காசி சிறப்புரையும் ஆற்றினர். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண்டர் விடுப்பு சலுகைகளை மீண்டும் வழங்கிட வேண்டும்.ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.மாநில முன்னுரிமை அரசாணையை திருத்தம் செய்து, மண்டல முன்னுரிமை என அறிவிக்க வேண்டும். ஊதியக்குழுவின் கட்டமைப்பால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாநில பொருளாளர் பழனிசாமி நன்றி கூறினார்.