| ADDED : ஜன 03, 2024 12:12 AM
விழுப்புரம் : விழுப்புரம் குழந்தைவேல் நகரில் நீடிக்கும் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை தீர்க்கக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.விழுப்புரம் நகராட்சி 11, 23, 24, 25, 27 ஆகிய வார்டு பகுதி மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமின் போது, காமதேனு நகர் மற்றும் குழந்தைவேல் நகர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் திருப்பதி பாலாஜி, செயலாளர் ரகுபதி, பொருளாளர் ஆனந்த ராஜா ஆகியோர் அதிகாரிகளிடம் அளித்துள்ள மனு:விழுப்புரம் நகராட்சி 24வது வார்டு குழந்தைவேல் நகரில் வசித்து வரும் பொதுமக்கள் 200 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது.இவர்களது பெயர்கள், வெவ்வேறு பகுதிகளில் இடம் பெற்றுள்ளது. இப்பகுதி வாக்காளர்கள் பெயரை சேர்க்க வலியுறுத்தி, கடந்த 10 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம்.இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைவேல் நகர் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கலெக்டர் பெருந்திட்ட வளாகம் பின்புறம் உள்ள கோவிந்தசாமி நகரில் மூடிக்கிடக்கும் சமுதாய கட்டடத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.காமதேனு நகரில், புதிதாக அமைக்கப்பட்ட பூங்கா, 6 மாதங்களுக்கு மேலாக மூடிக் கிடக்கிறது. இதனை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.