உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொடரும் மின் விபத்துகளை தடுக்க மின் வாரியம் எச்சரிக்கை: மின்சாதனங்களை கவனத்தோடு கையாள அறிவுரை

தொடரும் மின் விபத்துகளை தடுக்க மின் வாரியம் எச்சரிக்கை: மின்சாதனங்களை கவனத்தோடு கையாள அறிவுரை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மின் விபத்துகள் ஏற்படாத வகையில், பொதுமக்கள் மின் சாதனங்களை கவனமாக கையாளவும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று, மின்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில், மின்விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கு, பொது மக்கள் பின்வரும் விதிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும். புதிதாக கட்டட கட்டுமான பணி மேற்கொள்ளும்போது, மின்பாதைக்கு அருகாமையில் கட்டடங்களை விஸ்தரிப்பு செய்யாமல், மின்சார விதிகளில் குறிப்பிட்டுள்ள இடைவெளி விட்டு, பாதுகாப்புடன் கட்டடப் பணியை மேற்கொள்ள வேண்டும். தங்கள் பகுதியில் ஏற்படும் மின்தடை மற்றும் மின்சார பழுது புகார்களை 24 மணி நேரமும் செயல்படும் (சென்னை தலைமையகம்) மின்னகம் புகார் எண்ணுக்கு 94987 94987 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். 944585768 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.தங்கள் பகுதியில் தரையில் விழுந்து கிடக்கும் மின்கம்பிகள், தாழ்வாக மற்றும் தொய்வாக செல்லும் மின் கம்பிகளை பொது மக்கள் எக்காரணம் கொண்டும் தொட வேண்டாம். மின்சாரம் சார்ந்த சாதனங்களில் தன்னிச்சையாக பழுதுபார்க்காமல் மின் வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மழைக்காலத்தில் இடி அல்லது மின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர் மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஈரமான கைகளுடன் சுட்சுகள் மற்றும் விளக்குகள் போன்றவற்றை இயக்கக் கூடாது. மழைக்காலங்களில் டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். மின் கம்பத்துக்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர்கள் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும்.கால்நடைகளையும் அதில் கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். இடி மின்னலின்போது தஞ்சமடைய மின்கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடு, கடை, ஓட்டல்களில் ஒயரிங் செய்யும்போது, தரமான ஐ.எஸ்.ஐ .,முத்திரையிட்ட ஒயரிங் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். சாதனங்களுக்கு எர்த் செய்ய வேண்டும். மின்கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் பொருட்டு சர்க்யூட் பிரேக்கர்களை அணைத்து வகையான மின் இணைப்புகளும் பொருத்த வேண்டும். பழுதான மின்சாதனங்களை உடனடியாக மாற்ற வேண்டும். இதன் மூலம் மின்விபத்துக்கள், மின்சாதனங்கள் சேதம் அடைவதை தடுக்க முடியும்.சொந்த இடங்களில் கட்டுமான பணி மேற்கொள்ளும்போது, அருகே மின் மின்கம்பிகள் சென்றால், அதனருகில் செல்லாமல், மின் பாதையை தொடாமலும் கட்டட பணிக்கான இரும்பு பைப்புகள், கம்பிகள், தளவாடப் பொருட்களை கொண்டு செல்லாமல் கவனமாக பணி மேற்கொள்ள வேண்டும். தங்கள் பகுதியில் மின்சாரம் சார்ந்த புகார்கள், குறைகள் தொடர்பாக, அருகில் உள்ள துணை மின் நிலையங்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். விழுப்புரம் செயற்பொறியாளர் 94458 55738, கண்டமங்கலம் செயற்பொறியாளர் 94458 55769, திண்டிவனம் செயற்பொறியாளர் 94458 55835, செஞ்சி செயற்பொறியாளர் 94458 55784. இதனால், பொதுமக்கள் விழிப்புணர்வோடும், மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டு, மின் விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ