விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 68 ஆயிரத்து 386 விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல், வேர்க்கடலை, உளுந்து, எள், கரும்பு உள்ளிட்ட 60 ஆயிரத்து 685 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஆண்டுதோறும், புயலினாலும், தொடர் கனமழையினாலும், வயலில் மழைநீர் அளவுக்கு அதிகமாக தேங்கி பயிர்கள் சேதமடைகின்றன. இதனால், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு பயிரில் சரியான விளைச்சல் இல்லாமல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடுசெய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் ஆண்டுதோறும் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2025-26ம் ஆண்டில் சாகுபடி செய்யும் காரீப், சிறப்பு (சம்பா) மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் காப்பீடு செய்ய நெற்பயிருக்கு நேற்று முன்தினம் 1ம் தேதி, உளுந்து பயிருக்கு கடந்த 30ம் தேதி, வேர்க்கடலைக்கு வரும் ஜனவரி 20ம் தேதி, எள்ளுக்கு ஜனவரி 31ம் தேதி, கரும்புக்கு மார்ச் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 68 ஆயிரத்து 386 விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள 60 ஆயிரத்து 685 ஹெக்டேர் பரப்பளவிலான பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். நெற்பயிருக்கு 59 ஆயிரத்து 495 விவசாயிகள் 53 ஆயிரத்த 969 ஹெக்டேரும், உளுந்து பயிருக்கு 8,343 விவசாயிகள் 6,341 ஹெக்டேரும், வேர்க்கடலைக்கு 378 விவசாயிகள் 253 எக்டரும், எள்ளுக்கு 13 விவசாயிகள் 3 ஹெக்டேரும், கரும்புக்கு 157 விவசாயிகள் 119 ஹெக்டேருக்கு விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளனர். இதில், மாவட்டத்தில் உளுந்து உள்ளிட்ட இதர பயிர்களை சாகுபடி செய்தவர்களைவிட, நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிகளவில் காப்பீடு செய்துள்ளனர். நெல், உளுந்து பயிர்களுக்கு காப்பீடு தேதி முடிவடைந்து விட்ட நிலையில், வேர்க்கடலை, எள் மற்றும் கரும்பு பயிர்களுக்கு கால அவகாசம் உள்ளது. இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.