| ADDED : டிச 31, 2025 04:27 AM
வானுார்: திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சந்திப்பில் இருந்து இரும்பை மகாகாளேஸ்வரர் கோவில் வரை 1.600 கி.மீ., துாரத்திற்கு சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து இரும்பை வழியாக கோட்டக்கரை, ஆலங்குப்பம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான கிராம மக்கள் சென்று வருகின்றனர். இது மட்டுமின்றி சென்னை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் வழியாக வரும் வாகனங்களும் இந்த சாலை வழியாக ஆரோவில் பகுதிகளுக்கு செல்கின்றன. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை மிக குறுகியதாக இருந்ததால் எதிர் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்தது. இதனால் மாநில நெடுஞ்சாலைத்துறை வானுார் தாலுகா மூலம், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சந்திப்பு முதல் இரும்பை மகாகாளேஸ்வரர் கோவில் வரை 1.600 கி.மீ., தொலைவிற்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு புறம் மட்டும் 5 அடி அளவிற்கு சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.