விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., அரசு கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியளித்தபடி, அரசு ஊழியர்களுக்கான பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், மாநிலம் தழுவிய வேலை நிறுத்ததில் நேற்று ஈடுபட்டனர். விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயானந்தம், சிவக்குமார், தண்டபாணி முன்னிலை வகித்தனர். அரசு கல்லுாரி ஆசிரியர் சங்க சிவராமன் சிறப்புரையாற்றினார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில், தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியளித்தபடி, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு நெருக்கடிகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும், அரசு துறை காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இதே போல், மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களிலும், ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுதும் 500 ஆசிரியர்கள், 600 அரசு ஊழியர்கள் வரை பங்கேற்றனர். திண்டிவனம் திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் கலைவாணர்,செந்தில்குமார், ராஜேஷ், ஏழுமலை, சுந்தரமூர்த்தி, ஆறுமுகம் பங்கேற்றனர். விக்கிரவாண்டி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் செல்வமணி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் கணேஷ், குருமூர்த்தி கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஒருங்கிணைப்பாளர்கள், செயலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். செஞ்சி செஞ்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஜாக்டோ, ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயச்சந்திரன், அண்ணாதுரை, அபிராமி, தேவராஜ் முன்னிலை வகித்தனர். வட்டார நிர்வாகிகள் ஷேக்மூசா, தண்டபாணி, கோவிந்தராஜ், சுதாகர், பார்த்திபன், செந்தில் பாலா, சங்கரநாராயணன், அருள், ரவிக்குமார் பங்கேற்றனர்.