| ADDED : நவ 18, 2025 07:08 AM
கோ ட்டக்குப்பம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் குற்றவழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோட்டக்குப்பம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் கிளியனுார், பட்டானுாரிலும் புதுச்சேரி - சென்னை இ.சி.ஆரில் பெரிய முதலியார்சாவடி, கீழ்புத்துப்பட்டிலும் மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் உள்ளன. புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை வாங்கி வாகனங்களில் கடத்தி செல்பவர்களை அந்தந்த பகுதியில் உள்ள சோதனைச் சாவடி போலீசார் சோதனை செய்து அவர்களிடமிருந்து மதுபானங்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைப்பார்கள். மேலும் மதுவிலக்கு காவல் நிலையத்தில் உள்ள போலீசார் மரக்காணம், கோட்டக்குப்பம், கிளியனுார், வானுார், ஆரோவில் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம், மதுபானங்கள் விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து மதுபானங்களை பறிமுதல் செய்து, மதுபானங்கள் மீது குற்ற வழக்கு எண்ணை எழுதி மதுவிலக்கு காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைப்பார்கள். இந்நிலையில் மதுவிலக்கு காவல் நிலையத்தில் உள்ள அதிகாரி கடந்த மாதம் குற்றவழக்கில் உள்ள மதுபானங்களை கணக்கெடுக்கும் பணியில் போலீசாரை ஈடுபடுத்தியுள்ளார். அப்போது, கணக்கில் நுாற்றுக்கும் மேற்பட்ட பிராந்தி, விஸ்கி மது பாட்டில்கள் மாயமாகி இருப்பதும், ஒரு சில பீர் பாட்டில்கள் காலியாக இருப்பதை பார்த்தும் கணக்கெடுத்த மது விலக்கு அதிகாரி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, பீரை எலி குடித்திருக்கலாம். பிராந்தி, விஸ்கி மது பாட்டில்கள் மாயமானது தெரியவில்லை என மழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மதுவிலக்கு அதிகாரி, உயர் அதிகாரிக்கு தெரிவதற்கு முன் காணாமல் போன மது பாட்டில்களை உடனடியாக சரிகட்ட வேண்டும் என போலீசாரிடம் கூறியுள்ளார். அதன் பின் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பிடிபடும் மதுபானங்களை வைத்து சரிகட்டும் பணியில் மதுவிலக்கு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.