| ADDED : நவ 27, 2025 04:54 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம், வீரபாண்டி பகுதிகளில் விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன் தலைமையில் விதை ஆய்வாளர்கள் ஜோதிமணி (விழுப்புரம்), நடராஜன் (கள்ளக்குறிச்சி) ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில், தனியார் விதை விற்பனை நிலையங்களில் முறையான அரசு பதிவு சான்று, பகுப்பாய்வு முடிவுகள், கொள்முதல் பட்டியல் இல்லாத 18 விதை குவியல்களுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள 20 கிலோ தர்பூசணி விதைகள், 200 கிலோ நெல் விதைகள், 150 கிலோ உளுந்து விதைகளுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது. பதிவேடுகள் பராமரிக்காதது மற்றும் விற்பனை பட்டியல்கள் வழங்காத இரு விதை விற்பனை நிலையங்களின் விற்பனை 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கண்டாச்சிபுரம், வீரபாண்டி பகுதிகளில் அதிகளவில் தற்போது விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்வதால் பருவத்திற்கேற்ற நல்ல முளைப்புதிறன் உள்ள அரசு பதிவு சான்று பெற்ற விதைகளை விதை விற்பனையாளர்கள் விநியோகிக்க அலுவலர்கள் அறிவுறுத்தினர். விற்பனை பட்டியலில் பயிர், ரகம், நிலை, காலாவதி நாள், உற்பத்தியாளர் விபரம், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு விவசாயி கையெழுத்து பெற்று விநியோகம் செய்யவும், விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விதை சட்ட விதிகளை பின்பற்றி விழுப்புரம் மாவட்ட அனைத்து விதை விற்பனையாளர்களும் விநியோகிக்க வேண்டும். தவறினால் உரிய சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன் தெரிவித்தார்.