| ADDED : பிப் 04, 2024 04:23 AM
வானுார : இறந்த சாலைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்கக்கோரி முதல்வருக்கு மனு அனுப்பினர்.இதுகுறித்து சாலைப் பணியாளர் சங்க விழுப்புரம் மாவட்ட துணைத்தலைவர் வீரப்பன் தலைமையில், வானுார் உட்கோட்ட தலைவர் குப்புசாமி, செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சண்முகம் உள்ளிட்டோர் முதல்வருக்கு தபால் மூலம் அனுப்பியுள்ள மனு:கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் பரமத்தி வேலுார் மாநாட்டில் துணை முதல்வராக கூறிய வாக்குறுதிகளை தமிழகத்தின் இன்றைய முதல்வர் நிறைவேற்றிட வேண்டுகிறோம். குறிப்பாக 7.9.2002 முதல் 10.2.2006ம் ஆண்டு வரையிலான 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.சாலைப் பணியாளர்களை திறன்மிகு இல்லா ஊழியர்களாக அறிவித்து, தர ஊதியம் 1,900 ரூபாய் என மாற்றி அமைத்து புதிய ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.இறந்த சாலைப் பணியாளர்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். 7500க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.