மாவட்ட எல்லையோர போலீசாருக்கு கவனிப்பு; இறால் குஞ்சு ஏற்றும் லாரியில் குட்கா கடத்தல்
-நமது நிருபர்-இரு மாவட்ட எல்லையோரம் உள்ள போலீசாரை கவனித்துவிட்டு, குட்கா கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.மரக்காணம் கடற்கரையெட்டி 10க்கும் மேற்பட்ட இறால் குஞ்சு பொறிப்பகங்கள் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் இறால் குஞ்சுகள் மற்றும் இறால், மீன்களை ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்கள் மற்றும் உள்மாவட்டங்களுக்கும் கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். பிளாஸ்டிக் டப்புகளில் உள்ள இறால் குஞ்சுகளை மட்டும் இறக்கிவிட்டு, திரும்பி வரும் பொழுது லாரிகளில் காலி டப்புகளை மட்டுமே ஏற்றிக்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழக பகுதிகளில் உள்ள போலீசார் இந்த வாகனங்களை சோதனை செய்வது இல்லை.இந்நிலையில் கொரோனா தொற்றின் போது தமிழகத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டது. அப்பொழுது ஆந்திராவில் இறால் குஞ்சுகளை இறக்கிவிட்டு வரும் வாகனங்களில் மதுபானங்களை கடத்திவந்து மரக்காணம் பகுதியில் விற்பனை செய்தனர். இது குறித்து அப்பொழுது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.தற்பொழுது ஹான்ஸ், பான்மசாலா, கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்தால் நல்ல வருமானம் வரும் என எண்ணி சிலர் இறால் குஞ்சுகளை இறக்கிவிட்டு மரக்காணம் வரும் லாரிகளில் உள்ள காலி டப்புகளில் போதை பொருட்களை மறைத்துவைத்து கடத்தி வருகின்றனர்.இது போன்று கடத்தி வரும் வாகனங்கள் செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு பகுதியிலும், மரக்காணம் பகுதியிலும் மறைவிடத்தில் போதை பொருட்களை இறக்கிவைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் இந்த வாகனங்கள் போலீசார் கண்களில் பிடிபடுவதில்லை.மேலும் இந்த பகுதியில் இருந்து இரவு நேரங்களில் கார், மினி வேன், பைக்குகளில் குட்காவை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி செல்கின்றனர்.இரு மாவட்ட எல்லையில் உள்ள போலீசார் கவனிப்பை பெற்றுக்கொண்டு கண்டும் காணாமலும் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லையில் இருந்து ஹான்ஸ், குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி சென்ற பல வாகனங்கள் கோட்டக்குப்பம், திண்டிவனம் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பிடிபட்டுள்ளது. இந்தாண்டு மட்டும் இரண்டு டன் குட்காவிற்குமேல் பிடிபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.இது குறித்து இரு மாவட்ட எஸ்.பி., ஒன்றிணைந்து போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.