உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் கே.கே.,சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், குடியிருப்புகள் மிகுந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் கடைகளுக்கு முன் சாலையை ஆக்கிரமித்து நிரந்தர கொட்டகை போட்டு பலர் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நீண்டகால பிரச்னைக்கு தீர்வு காண நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றிக் கொள்ளாததால், நேற்று காலை 11:00 மணிக்கு நகராட்சி கமிஷனர் வசந்தி தலைமையில், நகரமைப்பு அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி., இயந்திர உதவியுடன் நேருஜி சாலை சந்திப்பிலிருந்து கே.கே., சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கொட்டகைகளை அகற்றினர். அப்போது, வணிகர் சங்கத்தினர் திரண்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்து நிறுத்தி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2 மாதங்களுக்கு முன் 'நோட்டீஸ்' கொடுத்தனர். தற்போது முன்னறிவிப்பின்றி கடைகளுக்கு முன் உள் கொட்டகைகள், முகப்பு விளம்பர போர்டுகளை இடித்த அகற்றுகின்றனர். கடைக்காரர்களே முகப்பு ஆக்கிரமிப்பு ெஷட்டுகளை அகற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்' என்றனர். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கோர்ட் வழிகாட்டுதலின்பேரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது. பல நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகரித்து வருவதால், முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியாக வேண்டும்' என்றனர். இருப்பினும், கே.கே.சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பெயரவில் மட்டுமே நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை