| ADDED : டிச 08, 2025 06:36 AM
திண்டிவனம்: திண்டிவனம் புதுமசூதி தெருவில் போடப்பட்ட சிமென்ட் சாலை கந்தலாகி பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டிவனம் நகராட்சியில் 265 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், பணிகள் நடந்த இடங்களில் புதிதாக சாலை போடப்பட்டது. செஞ்சி, திருவண்ணாலை, வந்தவாசி உள்ளிட்ட மார்க்கங்களிலிருந்து நகரத்திற்கு வரும் அனைத்து பஸ்களும், பஸ் நிலையத்திற்கு புதுமசூதி தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த அளவிற்கு போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த புது மசூதி தெருவில் போடப்பட்டிருந்த சிமென்ட் சாலை, பாதாள சாக்கடைத் திட்ட பணிக்காக உடைக்கப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும், இதுவரை அந்த சிமென்ட் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. மழை பெய்த நிலையில் சாலை இன்னும் படுமோசமாகி வாகனங்கள் செல்வதற்கு லாயக்கற்ற நிலையில், பள்ளமும், குண்டும் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகர மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் புது மசூதி தெருவில் புதிய சாலை போடுவதற்கு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.