உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மழையால் வெங்காயம் விற்பனை பாதிப்பு சாலையோரம் கொட்டிய வியாபாரி

 மழையால் வெங்காயம் விற்பனை பாதிப்பு சாலையோரம் கொட்டிய வியாபாரி

விழுப்புரம்: விழுப்புரத்தில் தொடர் மழையால் விற்பனை சரிந்ததால், தேக்கமடைந்து அழுகிப்போன 4 டன் வெங்காயத்தை வியாபாரி, சாலையோரம் கொட்டினார். விழுப்புரம் மாவட்டத்தில், பலர், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து, மினி டெம்போக்களில் எடுத்துச் சென்று, அதனை விற்பனை செய்து வருகின்றனர். இதே போல், வெங்காயத்தை கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து, விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும், விலை சரிவாலும் வெங்காய வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விழுப்புரம் அருகே திருப்பாச்சாவடிமேடு பகுதியை சேர்ந்த வெங்காய வியாபாரி ஜனார்த்தனன், தொடர் மழை தாக்கத்தால், வெங்காய வியாபாரத்தில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளார். இதனால், வாங்கிவந்த வெங்காயம் விற்பனையாகாமல், தேக்கமடைந்து அழுகியதால் நேற்று அதனை சாலையோரம் கொட்டினார். அப்போது அவர் கூறுகையில், 'இந்தாண்டு தொடர் மழை காரணமாக, வெங்காய விற்பனை குறைந்துள்ளது. பெங்களூரு பகுதியிலிருந்து மொத்தமாக வாங்கி வந்து, இங்கு சில்லரையில் கிலோ 25க்கு ரூபாய்க்கு விற்கிறோம். தற்போது பெய்து வரும் தொடர் மழையால், நான் விற்பனைக்கு வைத்திருந்த 4 டன் வெங்காயத்தில், பெருமளவு அழுகியது. இதனால், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெங்காயத்தை, வேறு வழியின்றி கீழே கொட்டி, மாடுகளுக்கு தீவனமாக அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை