திண்டிவனத்தில் வார்டு சிறப்பு கூட்டம் ஆளும்கட்சி கவுன்சிலர் புறக்கணிப்பு
திண்டிவனம்: திண்டிவனத்தில் வார்டு சிறப்பு கூட்டத்தை ஆளும்கட்சி கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் புறக்கணித்ததால் பரபரப்பு நிலவியது. திண்டிவனம் நகராட்சி 24வது வார்டில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேற்று வார்டு சிறப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை அந்த வார்டு ஆளும்கட்சி கவுன்சிலர் ராம்குமார் மற்றும் பொதுமக்கள் புறக்கணித்தனர். இது குறித்து ராம்குமார் கூறுகையில், 'இந்த வார்டுக்கு சாலை வசதி, தெரு மின் விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தவில்லை. பாதாள சாக்கடை பணிகளையும் நகராட்சி அதிகாரிகள் நிறைவு செய்து கொடுக்கவில்லை. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காததால் வார்டு சிறப்பு கூட்டத்தை புறக்கணித்துள்ளோம்' என்றார். ஆளும்கட்சி கவுன்சிலரே கூட்டத்தை புறக்கணித்த சம்பவம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.