| ADDED : டிச 10, 2025 06:19 AM
விழுப்புரம்: பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெறலாம். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஆண்டு தோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, கலை அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நிபந்தனை ஏதுமின்றி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருத்தல் வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்லுாரி பல்கலைக் கழக தகவல் திட்ட எண்ணில் https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மேலும், மாணவர்கள் தங்களது கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகைக்கான ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.