| ADDED : நவ 21, 2025 07:06 AM
திண்டிவனம்: வாலிபர் தற்கொலைக்கு காரணமான பெண்ணை கைது செய்யக்கோரி, திண்டிவனம் டி.எஸ்.பி., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வன்னிப்பேர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன், 39; இவர், கடந்த 16ம் தேதி போதையில் நிர்வாணமாக நின்றிருந்தார். இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மணிகண்டனை துடைப்பத்தால் அடித்து விரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன், மாட்டுக்கொட்டகையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்தனர். மேலும், நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து மணிகண்டனின் உடலை அவரது உறவினரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால், உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மணிகண்டன் சாவுக்கு காரணமான பெண்ணை கைது செய்யக்கோரி, திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., அலுவலகத்தை மாலை 4:00 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.