விழுப்புரத்தில் கண்காணிப்பு கேமரா.. 200 இடங்களில்! தயாராகிறது தனி கட்டுப்பாட்டு அறை
விழுப்புரம்: விழுப்புரத்தில் காவல்துறை சார்பில், 200 இடங்களில் கண்காணிப்பு கேமராவுடன் தனி கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கும் திட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. விழுப்புரம் நகரில் நேருஜி சாலை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டது. அந்த கேமராக்களும் நாளடைவில் பராமரிப்பின்றி வீணாகியது. விழுப்புரத்தில் நடந்து வரும் போராட்டம், மோதல்கள், திருட்டுகள், வழிப்பறி போன்ற சம்பவங்களின்போது, போலீசார், தனியார் நிறுவனங்கள், கடைகளில் உள்ள சொற்ப அளவிலான கேமரா காட்சிகளை நம்பியே விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சிறுவன் கடத்தல் சம்பவம் போன்ற முக்கிய வழக்குகளும் இதுவரை துப்பு துலங்க முடியாமல் உள்ளது. விழுப்புரம் முழுதும் திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கு வீடுகள், குடியிருப்புகளில் பொது மக்கள் கேமராக்களை பொறுத்த வேண்டும் என காவல் துறையினர் நீண்டகாலமாக அறிவுறுத்தி வருகின்ற னர். ஆனால், விழுப்புரம் நகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது விமர்சனங்களுக்குள்ளானது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை தரப்பில் கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வந்தது. இதனையடுத்து, விழுப்புரம் நகரை கண்காணிப்பு கேமரா கண்காணிப்பில் கொண்டுவர காவல் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார்குப்தா, ஆயுதப்படை பிரிவு டி.எஸ்.பி., ஞானவேல் ஆகியோரது மேற்பார்வையில், உட்கோட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில், விழுப்புரம் நகரில் உள்ள முக்கிய சாலைகள், சந்திப்புகளில் கேமரா அமைத்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, திருச்சி நெடுஞ்சாலையில், புதிய பஸ் நிலையம் முதல் ஜானகிபுரம் பைபாஸ் வரை 30 கேமராக்கள். கலெக்டர் அலுவலக வாயில் முதல் சென்னை சாலை முத்தாம்பாளையம் பைபாஸ் சந்திப்பு வரை 30 கேமராக்கள். புதுச்சேரி சாலையில் சிக்னல் சந்திப்பிலிருந்து கோலியனுார் வரை 50 கேமராக்கள். சிக்னல் சந்திப்பு முதல் மாம்பழப்பட்டு ரோட்டில் இந்திரா நகர் மேம்பாலம் வரை 30 கேமராக்கள். எல்லீஸ் சத்திரம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் 40 கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த கேமராக்களின் பதிவுகள் கேபிள்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிக்க விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தின் வாயில் பகுதியில் உள்ள காலி இடத்தில் புதிய கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக, பெருந்திட்ட வளாகத்தில் புதிய கண்காணிப்பு அறை கட்டடத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கியது. முதல் கட்டமாக, திருச்சி சாலையில் 15, புதுச்சேரி சாலையில் கோலியனுார் வரை 25 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை சாலை, மாம்பழப்பட்டு சாலை பகுதிகளில் முக்கிய இடங்களில் கேமராக்கள் பொறுத்துவதற்கான கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள், ஓரிரு மாதங்களில் முடிக்கப்பட்டு, விழுப்புரம் நகரம் 200 கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்படும் என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரி வித்தனர்.