| ADDED : நவ 20, 2025 05:33 AM
வானுார்: வானுார் அரசு கலைக்கல்லுாரியில் தமிழ்நாடு லத்தி சங்கத்தின் சார்பில் நடந்த மண்டல அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு லத்தி சங்கமும், விஜயராஜா அகெடமியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மண்டல அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது. இந்த போட்டியில் வானுார் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து 185 பேர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, சிலம்பலம் தற்காப்பு கலை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு லத்தி சங்க துணை தலைவர் ராஜகோபாலன், பயிற்றுநர்கள் செந்தில், முருகன், பேராசிரியர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மண்டல அளவிலான லத்தி சாம்பியன்ஷிப் போட்டியை கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் அரங்க பண்பில் நாதன் மேற்கொண்டார்.