| ADDED : பிப் 15, 2024 11:30 PM
விழுப்புரம் நகராட்சியில், அடிப்படை வசதிகளை செய்வதில், மெத்தனப்போக்கு நீடிப்பதாக கவுன்சிலர் ராதிகா தெரிவித்துள்ளார்.விழுப்புரம் 9வது வார்டு மக்கள் பிரச்னை குறித்து அ.தி.மு.க., கவுன்சிலர் வழக்கறிஞர் ராதிகா கூறியதாவது:விழுப்புரம் நகராட்சி 9வது வார்டு பகுதியில், அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். வார்டு பகுதியில் 7 சிறு பாலங்கள், சிமென்ட் சாலைகள், மேல் தெரு மற்றும் வடக்கு தெரு பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் உயர் கோபுர மின்விளக்கு வசதி அமைத்திட பல முறை வலியுறுத்தி வருகிறேன்.இதில், சில கோரிக்கைகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கவுன்சிலர்கள் பொறுப்புக்கு வந்து 2 ஆண்டுகளாகிறது. ஆனால், அடிப்படை வசதிகளை செய்து தருவதில், நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கில் செயல்படுகிறது.வார்டு மறுவரையறை செய்வதற்கு முன், 5வது வார்டாக இருந்த இந்த வார்டில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2011 முதல் 2016ம் ஆண்டு வரை 1.51 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த வார்டில் உள்ள வடக்கு தெருவில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை நீர் வெளியேற்றும் நிலையம், வடக்கு தெரு, கைவல்லிய தெரு பகுதிகளில் சிறு பாலங்கள், சிவன் கோவில் அருகே உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. புதிதாக மின்பாதை அமைக்கப்பட்டது. வார்டில், 130 பேருக்கு முதியோர் உதவித்தொகை உத்தரவு வழங்கப்பட்டது.சிறுதொழில் செய்வதற்காக வங்கிகளில் ஜாமின் கடன் வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்தும் மையம் துவங்கப்பட்டது. ஆனால், தற்போதைய நகராட்சி நிர்வாகம் கவுன்சிலர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்வதாக தெரியவில்லை.இவ்வாறு கவுன்சிலர் ராதிகா தெரிவித்தார்.