பொங்கல் இனாம் வசூலில் புதிய முறை இது புதுசா இருக்கே...
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நிருபிக்கும் வகையில் தற்போது பொங்கல் இனாம் வசூல் செய்வதில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். இதற்கு முன்புவரை பொங்கல் முடிந்ததும் மின்துறை, போஸ்டல், டெலிபோன், நகராட்சி, பேரூராட்சி, சுமை துாக்கும் தொழிலாளர்கள் தனியாகவோ, குழுவாகவே சென்று வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்களை சந்தித்து பொங்கல் இனாம் வாங்குவார்கள்.குழுவாக செல்லும் போது ஒவ்வொருவரும் தரும் இனாம் தொகையை நோட்டில் எழுதி வைத்து பின்னர் பிரித்து கொள்வார்கள். இந்த ஆண்டு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டில் வசூலான தொகையை கணக்கில் கொண்டு ஏல முறையை அறிமுகம் செய்துள்ளனர். சங்கத்திலோ, குழுவிலோ இருப்பவர்களுக்குள் ஏலம் நடத்தி, ஏலத்தில் அதிக தொகை கேட்பவர் அந்த தொகையை கட்டி விட வேண்டும். இதன் பின் ஏலம் எடுத்தவர் தனியாகவோ அல்லது குழுவில் உள்ளவர்களின் துணையுடனே பொங்கல் இனாம் வசூலித்து கொள்ள வேண்டும்.இதில் கூடுதலாக வசூலாகும் தொகை ஏலம் எடுத்தவரையே சாரும்.இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில ஊர்களில் அறிமுகமாகி உள்ள இந்த புதிய முறை, அடுத்து வரும் ஆண்டுகளில் மேலும் பல ஊர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது.