| ADDED : நவ 18, 2025 07:34 AM
செஞ்சி: வல்லம் ஒன்றிய தி.மு.க., துணைச் சேர்மன் பதவியை ராஜினாமா செய்ததால், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றிய துணை சேர்மேனாக இருப்பவர் மலர்விழி. இவரது கணவர் அண்ணாதுரை வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். நேற்று மாலை 5:00 மணியளவில் தனது கணவர் அண்ணாதுரையுடன் வந்த துணை சேர்மன் மலர்விழி, 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவியையும், துணை சேர்மன் பதவியையும் ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை பி.டி.ஓ., ராமதாசிடம் கொடுத்தார். அவர் கொடுத்துள்ள ராஜினாமா கடிதத்தில், ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு காவலர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 13ம் தேதி ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், பி.டி.ஓ., ராமதாஸ் இருவரும் நேர்காணல் நடத்தி பணி நியமனம் செய்துள்ளனர். இதற்கான பணி ஆணையை மாவட்ட செயலாளர் மஸ்தான் மூலம் இன்று வழங்கியுள்ளனர். இதில் துணைப் சேர்மே னாகிய என்னுடைய கையொப்பம் இல்லாமலும், எனக்கு எந்த தகவலும் இல்லாமலும் சட்டத்திற்கும், விதிமுறைகளுக்கும் முரணாக நடந்துள்ளதால், நான் வகித்துவரும் ஒன்றிய கவுன்சிலர் பதவியையும், ஒன்றிய துணை சேர்மன் பதவியையும் ராஜினாமா செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் . தி.மு.க.,வில் ஒன்றிய செயலாளராக உள்ளவரின் மனைவி ஒன்றிய துணை சேர்மன் பதவியை ராஜினாமா செய்திருப்பது விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.