உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக பிரிக்க நடவடிக்கை :புதிதாக ஐந்து தாலுகா உருவாக்க வேண்டும்

கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக பிரிக்க நடவடிக்கை :புதிதாக ஐந்து தாலுகா உருவாக்க வேண்டும்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 5 தாலுகாக்களை உருவாக்கி கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், வானூர், திண்டிவனம், செஞ்சி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர் தாலுகாக்கள் உள்ளன. மொத்தம் 1104 ஊராட்சிகளில் 1490 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு 3 நகராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்கள், 15 பேரூராட்சிகள் உள்ளன. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தான் அதிக ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

செஞ்சி தாலுகாவில் 246 ஊராட்சிகள், கள்ளக்குறிச்சியில் 154, சங்கராபுரத்தில் 179, திண்டிவனத்தில் 234, திருக்கோவிலூரில் 182, உளுந்தூர்பேட்டை யில் 175, வானூரில் 81, விழுப்புரம் தாலுகாவில் 239 ஊராட்சிகள் உள்ளன.மாவட்டத்தில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 29 லட்சத்து 60 ஆயிரத்து 373 பேர் இருந்தனர். விழுப்புரம் தாலுகாவில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 388 பேர், செஞ்சியில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 238 பேர், திண்டிவனத்தில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 141 பேர், வானூரில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 576 பேர், திருக்கோவிலூரில் 3 லட்சத்து 73 ஆயி ரத்து 521 பேர், சங்கராபுரத்தில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 675 பேர், கள்ளக்குறிச்சியில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 250 பேர், உளுந்தூர்பேட்டையில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 593 பேர் இருந்தனர்.

தற்போது 2010ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 17 லட்சத்து 44 ஆயிரத்து 832 ஆண்கள், 17 லட்சத்து 18 ஆயிரத்து 452 பெண்கள் உட்பட 34 லட்சத்து 63 ஆயிரத்து 284 பேர் என எண்ணிக்கை உயர்ந்துள் ளது. கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 17 சதவீதம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் சராசரியாக 17 சதவீதம் மக்கள் தொகை அதிகரித்திருக்க வாய்ப்புள்ளன.

மக்கள் தொகை அதிகரிப்பால் மாவட்டத்தை நிர்வகிப்பது சிறிது சிரமமாக இருக்கும். கள்ளக்குறிச்சி தாலுகாவை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக உள்ளது. கள்ளக்குறிச்சி தாலுகாவில் 154, சங்கராபுரத்தில் 179 உட்பட 333 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவை இரண்டிலும் இருந்து 50 சதவீதம் கிராமங்களை பிரித்து சின்னசேலம் தாலுகா உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளதா என கேட்டு தமிழக அரசிலிருந்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சின்னசேலம் தாலுகா உருவாக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சில தினங்களுக்கு முன் தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

செஞ்சி தாலுகாவில் 246 கிராமங்களில் இருந்து 50 சதவீதத்தை தனியாக பிரித்து மேல் மலையனூர் தாலுகா உருவாக்கலாம். திண்டிவனத்தில் 234 கிராமங்களில் 50 சதவீதத்தை பிரித்து மரக்காணம் தாலுகா உருவாக்கலாம். மரக்காணத்தில் இருந்து திண்டிவனம் தாலுகா அலுவலகம் 37 கி.மீ., தூரத்தில் உள்ளது. இங்கு வர மரக்காணம் பகுதி மக்கள் அதிகம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

உளுந்தூர்பேட்டையில் 175, திருக்கோவிலூரில் 182 உட்பட 367 கிராமங்களில் இருந்து 50 சதவீதம் தனியாக பிரித்து திருவெண்ணெய்நல்லூர் தாலுகா உருவாக்கலாம். விழுப்புரம் தாலுகாவில் 239 கிராமங்களில் இருந்து 50 சதவீதத்தை பிரித்து கண்டமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கலாம். ஏற்கனவே உள்ள 8 தாலுகாக்களுடன், புதிதாக உருவாக்க வாய்ப்புள்ள சின்னசேலம், திருவெண்ணெய் நல்லூர், மேல்மலையனூர், மரக்காணம், கண்டமங்கலத்துடன் சேர்த்து மாவட்டத்தில் மொத் தம் 13 தாலுகாக்கள் வரும். இதில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர், உளுந்தூர் பேட்டையை இணைத்து கள்ளக்குறிச்சி மாவட்டமும், மீதமுள்ள விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், வானூர் தாலுகாகளுடன் கண்டமங்கலம், மரக்காணம், மேல்மலையனூர் உட்பட 7 தாலுகாக்களை விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்