விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில், 208 பயனாளிகளுக்கு ரூ.16.50 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், 72-வது கூட்டுறவு வார விழா, விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) பத்மஜா தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், தரணிவேந்தன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், மணிக்கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த விழாவில், சிறு,குறு வணிகர் கடன் 12 பேருக்கு ரூ.6 லட்சமும், கலைஞர் கைவினைத்திட்டம் மூலம் 2 பேருக்கு கடன் ரூ.1 லட்சமும், ஒருவருக்கு கல்விக்கடன் ரூ.33 ஆயிரமும், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் 3 பேருக்கு ரூ.1.50 லட்சமும், சிறு வணிக கடன் 33 பேருக்கு ரூ.18.96 லட்சமும், நாட்டுப்புற கலைஞர்கள் கடன் ஒருவருக்கு ரூ.3 லட்சமும், மகளிர் சுயஉதவிக்குழு கடன் 94 பேருக்கு ரூ.14.03 கோடியும், மாற்றுத்திறனாளி கடன் 12 பேருக்கு ரூ.8.36 லட்சமும், டாப்செட்கோ குழுக்கடன் 4 பேருக்கு ரூ.54.39 லட்சமும், பயிர் கடன் 28 பேருக்கு ரூ.25.15 லட்சமும் என, மொத்தம் 208 பயனாளிகளுக்கு, ரூ.16 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்து 52 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டது. கூட்டுறவு வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணை சேர்மன் ஷீலாதேவி சேரன், நகர சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு முன்னிலை வகித்தனர். துணைப்பதிவாளர்கள் சிவபழனி, ஜீவிதா, சமரசம், மீனாட்சிசுந்தரம், சரண்யா மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.