உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  துணை முதல்வர் கவனிப்பாரா? விழுப்புரம் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விரைந்து செயல்படுத்திட பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 துணை முதல்வர் கவனிப்பாரா? விழுப்புரம் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விரைந்து செயல்படுத்திட பொதுமக்கள் எதிர்பார்ப்பு

விழுப்புரம் மாவட்டத்திற்கு, முதல்வர் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றிட, துணை முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். விழுப்புரத்தில், கடந்த ஜனவரி 28ம் தேதி, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவரங்கம் மற்றும் இடஒதுக்கீடு சமூக நீதி போராளிகளுக்கான மணி மண்டபத் திறப்பு விழா நடந்தது. இவற்றை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்திற்காக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 11 புதிய திட்டங்கள் வருமாறு: 1 விழுப்புரம் பகுதியில், கடந்த ஆட்சி காலத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த, தளவானுார் அணைக்கட்டு 84 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும். 2 கண்டமங்கலம் ஒன்றியத்தில், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே, வழுதாவூர் அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும். 3 காணை மற்றும் கோலியனுார் ஒன்றியங்களில் உள்ள 29 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 35 கோடி ரூபாய் செலவில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். 4 விக்கிரவாண்டி பேரூராட்சி கக்கன் நகரில், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், பல்நோக்கு சமுதாயக் கூடம் அமைக்கப்படும். 5 விழுப்புரம் நகராட்சியின் பழம்பெரும் அலுவலக கட்டடம், 2 கோடி ரூபாய் செலவில் டவுன் ஹாலாக மாற்றப்படும். 6 வீடூர் அணையிலிருந்து மயிலம், பாதிரப்புலியூர் வழியாகச் செல்லும் 15 கி.மீ., துார சாலை 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த 6 திட்டப் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகிறது. 7 செஞ்சி மற்றும் மரக்காணத்தில் தலா 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. (இந்த திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது) 8 சாத்தனுார் அணையின் உபரி நீரை நந்தன் கால்வாயில் இணைப்பதற்கான ஊட்டு கால்வாய் அமைக்க வேண்டும் என செஞ்சி, விக்கிரவாண்டி, விழுப்புரம், வானுார், பென்னாத்துார் மற்றும் திருவண்ணாமலை பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படும். இதற்காக, 304 கோடி ரூபாய் செலவில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கி, அரசு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. 9 விழுப்புரம் அடுத்த தென்னமாதேவி, அயனம்பாளையம் கிராமங்களில், பம்பை ஆற்றின் வடகரையில், சங்ககால தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. பம்பை ஆற்றின் வடகரை பகுதியை, எம்.எல்.ஏ., மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். இதன் பிறகு சங்ககால அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கப்படவில்லை. 10 திருவாமாத்துார் அபிராமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருமண மண்டபம், சமையல் கூடம் மற்றும் உணவருந்தும் கூடம் அமைக்கப்படும். 11 விழுப்புரம் நகராட்சி சாலாமேடு பகுதி மக்களின் தேவைக்காக, 5 கோடி ரூபாய் செலவில், திருப்பாச்சனுார் ஆற்றுப் படுகையிலிருந்து குடிநீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த இரு திட்டங்களும் துவக்கப்படவில்லை. கடந்த 11 மாதங்களுக்கு முன், விழுப்புரம் மாவட்டத்திற்காக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 11 திட்டங்களில், 6 திட்டங்களுக்கான பணிகள் துவங்கி, நடைபெற்று வருகிறது. ஒரு தொழிற்பயிற்சி நிலைய திட்டம் மட்டும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நந்தன் கால்வாய் ஊட்டுக் கால்வாய் திட்டம், அகழ்வாராய்ச்சி திட்டம், திருவாமாத்துார் கோவில் இடத்தில் திருமண மண்டபம், திருப்பாச்சனுார் ஆற்றுக் குடிநீர் திட்டம் ஆகிய திட்டம் பூர்வாங்க நிலையில் உள்ளது. முதல்வர் அறிவித்த புதிய திட்டங்கள் அனைத்தையும், துரிதமாக செயல்படுத்திட, தமிழக சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறையை நிர்வகிக்கும், துணை முதல்வர் உதயநிதி சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் என மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். -நமது நிருபர்-:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ