| ADDED : ஜன 07, 2024 05:18 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் குறித்த மண்டல அளவிலான விளக்க கூட்டம் நடந்தது.தமிழக அரசு 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களை சிறப்பாக செயல்படுத்த வரவுக்கும் செலவிற்குமான வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும்.நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டிய 8000 பேருக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ம் தேதி, போக்குவரத்துக் கழக தொழிற் சங்க கூட்டமைப்பினர், வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.இந்த வேலை நிறுத்தத்திற்கான மண்டல அளவிலான விளக்க கூட்டம், விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன் நேற்று நடந்தது.இக்கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரகோத்தமன், தலைவர் குணசேகரன், மறுமலர்ச்சி தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன், பணியாளர் சங்க மண்டல தலைவர் துரைராஜ், ஐ.என்.டி.யு.சி. சங்க நிர்வாக தலைவர் குப்பன், அண்ணா தொழிற்சங்க மண்டல பொறுப்பாளர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.