| ADDED : ஜூலை 04, 2024 12:52 AM
மாவட்டத்தில் நகர், ஊரகப்பகுதிகளில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப டூவீலர், கார், ஆட்டோ, வேன், லாரி வாகனங்களின் எண்ணிக்கையும் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகப்படியாக உயர்ந்துஉள்ளது. இதனால் நகர் பகுதிகள், முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.அருப்புக்கோட்டை 10, விருதுநகர் 10, சிவகாசி 20, சாத்துார் 20, ஸ்ரீவில்லிப்புத்துார் 10, ராஜபாளையம் 20 என மொத்தம் மாவட்டத்தில் 90 டிராபிக் போலீசார் மட்டுமே பணியில் இருக்கின்றனர். விருதுநகரில் 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த எண்ணிக்கை 1990 ஆண்டு மக்கள் தொகை எண்ணிக்கை ஏற்ப உள்ளது.அரசின் மற்ற துறைகளில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் மாவட்டத்தில் டிராபிக் போலீசாரின் பணியிடங்கள் மட்டும் அதிகரிக்கப்படவில்லை. மேலும் லோக்சபா தேர்தல் சமயத்தில் விருதுநகர் லோக்சபா தொகுதி நட்சத்திர வேட்பாளர்கள் தொகுதியாக மாறியது. இங்கு நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்ற முக்கியஸ்தர்கள்வருகையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைசீரமைக்க டிராபிக் போலீசார் திண்டாடினர்.ஸ்டேஷன் பணியில் இருந்தவர்களில் சிலரை உதவிக்கு அழைத்து டிராபிக் பணிகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஸ்டேஷன் பணிக்கு ஆட்கள் இல்லாமல் பணிகள் பாதிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து பணியிடங்களை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என அதிகாரிகள் கூறிய நம்பிக்கையில் பணியாற்றினர்.ஆனால் அது நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டதால் பலரும் டிராபிக் பணியில் இருந்து ஸ்டேஷன் பணிக்கு பணிமாறுதல் கோரும் நிலை உருவாகியுள்ளது. எனவே மாவட்டத்தில் டிராபிக் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.