| ADDED : ஏப் 27, 2024 03:52 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: சிவகாசி அருகே குடிபோதையில் வேலம்மாளை 60, கழுத்தை நெரித்தும், கீழே தள்ளி மிதித்தும் கொலை செய்த வீரபுத்திர மணிகண்டனுக்கு 28, பத்து ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சிவகாசி அருகே வெம்பக்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முருகன், கட்டுமான தொழிலாளி. இவரது சித்தி வேலம்மாள்,60, சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இவரை முருகன் தனது பராமரிப்பில் பாதுகாத்து வந்துள்ளார்.2022 ஏப்ரல் 6 அன்று முருகன் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த வேலம்மாள் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் வீட்டுத் திண்ணையில் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து அவரை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். எரிப்பதற்கு தயார் செய்தபோது வேலம்மாளின் இடது பக்க நெற்றியில் ஒரு வெட்டு காயமும், நெஞ்சில் வீக்கமும் இருந்துள்ளது. இதனால் வேலம்மாளின் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. உடனடியாக இறுதிக் காரியம் செய்வதை நிறுத்திவிட்டு வெம்பகோட்டை போலீசில் முருகன் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த வீரபுத்திர மணிகண்டன், 28, என்பவர் குடிபோதையில் வேலம்மாளை கழுத்தில் துண்டு போட்டு நெரித்தும், கீழே தள்ளிவிட்டு மிதித்தும் கொலை செய்தது தெரியவந்தது.இதனையடுத்து அவரை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.இதில் வீரபுத்திர மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.