| ADDED : ஜூலை 05, 2024 02:04 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பெட்ரோல் பங்க் சர்வீஸ் ரோட்டில் காரை நிறுத்தி விட்டு ரோட்டில் தூங்கிய கார்த்தீஸ்வரன் 20, லாரி ஏறி பலியானார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த கார்த்தீஸ்வரன் பாத்திரக் கடையில் வேலை செய்தார். ஜூன் 27 இரவு நண்பர்கள் சாய்ராம் 19, பிரவீன் 22, பூவலிங்கம் மதன் 21, அரவிந்த் 24, கோகுல் 22, ஆகியோருடன் காரில் குற்றாலம் செல்ல ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக சென்றனர். பயண ஓய்விற்காக வன்னியம்பட்டி பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்திவிட்டு சர்வீஸ் ரோட்டில் படுத்து தூங்கினர்.ஆந்திராவில் இருந்து அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரியும் அப்பகுதியில் நிறுத்தி விட்டு டிரைவர் ரமேஷ் ஓய்வெடுத்துள்ளார். நேற்று காலை 6:00 மணிக்கு லாரியை எடுத்ததில் சர்வீஸ் ரோட்டில் படுத்திருந்த கார்த்தீஸ்வரன் மீது சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவஇடத்தில் தலை நசுங்கி பலியானார்.தூக்கத்திலிருந்து எழுந்த மற்ற நண்பர்கள் அதை கண்டு கதறி துடித்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. வன்னியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.