| ADDED : ஜூலை 13, 2024 07:04 AM
சாத்துார் : ஏழாயிரம்பண்ணையில் குறுகிய ரோடு, ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் டூவீலர்களால் மக்கள் போக்குவரத்து நெரிசலில் தவிக்கின்றனர்.ஏழாயிரம்பண்ணை 18 க்கும் மேற்பட்ட ஊராட்சிக்கு ஏழாயிரம்பண்ணை தாய் கிராமமாக உள்ளது.தீப்பெட்டி, அச்சு, பட்டாசு தொழில் விவசாயம் இந்த பகுதியில் நடைபெற்று வருவதால் காலை, மாலை நேரங்களில் இங்கு போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.சாத்துாரில் இருந்து சங்கரபாண்டியாபுரம் சிவகாசி சங்கரன்கோவில் செல்லும் அரசு, தனியார் பேருந்துகள்இங்குள்ள மெயின் ரோடு வழியாகவே சென்று வருகின்றன.மெயின் ரோட்டில் காய்கறி மார்க்கெட் உள்ளது. மேலும் கடைகள், ஓட்டல்கள், அதிக அளவில் உள்ளதால் காலை முதல் இரவு வரை மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பட்டாசு ஆலை தீப்பெட்டி ஆலை விபத்துக்கள் ஏற்பட்டால் போக்குவரத்து நெரிசல் காரணமாக காயம்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை ஓரளவுக்கு சீரமைத்தனர். ஆனால் இந்த பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் சாலையை விரிவாக்கம் செய்யாததாலும் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சனையாக உள்ளது.ஏழாயிரம்பண்ணை பஜார் முக்கு ரோட்டில் நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்படுகிறது. எனவே இங்கு ரோட்டை விரிவாக்கம் செய்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.