| ADDED : ஜூன் 19, 2024 05:07 AM
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் சமூக வலைத்தள ரீல்ஸ் மோகத்தில் பள்ளி சீருடையில் வகுப்பு, வளாகங்களில் மாணவர்கள் ஜாதி வீடியோக்கள் செய்வது அதிகரித்துள்ளது.குறிப்பாக சட்டையின் மேல்பட்டனை இறக்கி விட்டபடியும், காலரை துாக்கி விட்ட படியும் சமூக விரோத செயல்கள் செய்வோரை போல நடந்து கொள்கின்றனர். இத்தனைக்கும் இந்த மாணவர்களுக்கு 15 முதல் 17 வயது தான் இருக்கும். இந்த வயதிலே இது போன்று ஜாதிய வீர வசனங்கள் பேசுவது போன்ற செயல்கள் செய்வதால் வரும் நாட்களில் பிற மாணவர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வாய்ப்புள்ளது.இதனால் சிறு வயதிலே அவர்களது கல்வி பாதிக்கப்படுவதுடன் வன்முறை போன்ற சம்பவங்கள் அரங்கேறினால் எதிர்காலமே கேள்விக்குறியாகும். இது போன்ற ரீல்ஸ் மோகத்தில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி ஜாதி ரீதியான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இதை அதிகளவில் செய்கின்றனர். இதை ஆசிரியர்கள் தட்டி கேட்டாலும் அவர்களுக்கும் ஜாதி சாயம் பூசப்படுகிறது. இது மாவட்டத்தில் முக்கிய பிரச்னையாக தலையெடுத்து வருகிறது.விருதுநகரில் இது போன்று பள்ளியில் மாணவர்கள் செய்தது மாவட்ட நிர்வாகத்திடம் புகாராக சென்றுள்ளது. மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய புரிதலை ஏற்படுத்தி, கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ள வைப்பது அவசியம். உரிய கவுன்சிலிங் செய்ய வேண்டும். பெற்றோரை அழைத்து கண்காணிக்க செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதற்கென தனி குழு அமைத்து தீர்வு காண வேண்டும்.