விருதுநகர் : தனியார் நர்சரி பண்ணைகளில் இனத்துாய்மை இல்லாத கன்றுகளை விற்க அனுமதிக்க கூடாது என விருதுநகரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். நேற்று விருதுநகரில் குறைதீர் கூட்டம் நடந்தது. பருத்தி, கம்பு விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு காசோலை வழங்கப்பட்டது. மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் தென்னங்கன்றுகள், குழித்தட்டு நாற்றுகள் வழங்கப்பட்டன. இதில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், வேளாண் இணை இயக்குனர் விஜயகா, தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி, கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:ராமச்சந்திரராஜா, தமிழக விவசாயிகள் சங்கம்: தனியார் நர்சரி பண்ணைகளில் இனத்துாய்மை இல்லாத மாங்கன்று, பப்பாளி கன்று, தென்னங்கன்று விற்க அனுமதிக்க கூடாது. பில் கொடுக்கப்பட வேண்டும். அட்டையை முறையாக பராமரிக்க வேண்டும். அகழி தோண்டாததால் காட்டு யானைகள் விளைநிலங்களை பாழ்படுத்தி வருகின்றன. வனப்பகுதியில் கட்டப்பட்ட கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும். ஜெயசீலன், கலெக்டர்: அனுமதி பெறாத கட்டடங்களை ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் 2ம் முறையும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு சட்டபடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அகழிகளை தோண்ட நடவடிக்கை எடுக்கப்படும்.வனஜா, விதை ஆய்வு துணை இயக்குனர்: தனியார் நர்சரி பண்ணைகளில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அம்மையப்பன், சேத்துார்: சேத்துார் பேரூராட்சியில் களத்தை மராமத்து செய்ய வேண்டும். நிரந்தர கால்நடை மருத்துவமனை வேண்டும். அதே போல் எங்களின் நீண்ட கால கோரிக்கையான தென்னை பயிர் காப்பீடுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார்: தென்காசி, விருதுநகர் மாவட்டத்திற்கு பயன்படும் செண்பகவல்லி அணை திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசுக்கு மாவட்ட நிர்வாகம் திட்ட வரைவு அனுப்ப வேண்டும். உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: தென்னை வெள்ளை ஈ தாக்குதலால் காய்ப்பு திறன் குறைந்து வருகிறது. அந்த மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். புதிய மருந்துகளை கண்டுபிடித்து வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். மிளகாய் மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஓராண்டாகி விட்டது. நாற்றை மட்டும் கொடுக்கின்றனர். விதையாக வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. சுபா வாசுகி, தோட்டக்கலை துணை இயக்குனர்: நடவடிக்கை எடுக்கப்படும்.ஞானகுரு, மம்சாபுரம்: விவசாய பயன்பாட்டிற்கான மம்சாபுரம் - செண்பகதோப்பு ரோடு போட வேண்டும்.முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையில் டிராக்டர்கள் இல்லை. இருந்தாலும் அவை பயன்பாட்டிற்கு கிடைக்க காலதாமதமாகிறது.ஜெயசீலன், கலெக்டர்: அவை முறைப்படி அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேளாண் பொறியியல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராம்பாண்டியன், காவிரி - குண்டாறு கூட்டமைப்பு: அருப்புக்கோட்டை மதுரை நான்கு வழிச்சாலை கிழக்கு பகுதியில் பெய்யக்கூடிய மழைநீர் கட்டங்குடி வடக்கு பகுதி கால்வாய் வழியாக திருச்சுழி கண்மாய்க்கு செல்லும். இது துார்வாரப்படாமல் உள்ளது. மராமத்து செய்ய வேண்டும். காரியாபட்டி பேரூராட்சி கழிவுநீர் தோப்பூர் கண்மாயில் கலக்கிறது. இதை மாற்று பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.நாராயணசாமி, தமிழ் விவசாயிகள் சங்கம்: ஆமத்துார் வருவாய் கிராமத்தில் விளைநிலங்களுக்கு செல்லும் வண்டிப்பாதைகள், நீர்வரத்து ஓடையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மனு அளித்துள்ளோம். ஜெயசீலன், கலெக்டர்: மனு தொடர்பாக இரு தரப்பையும் அழைத்து விசாரித்தோம். நீர்வரத்து ஓடைகள் பட்டா நிலத்தில் வருகிறது. எந்தெந்த காரணங்கள் அடிப்படையில் இந்த ஆவணங்கள் சரி, தவறு என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவில் ஏதேனும் அதிருப்தி இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம்.நாராயணசாமி, தமிழ் விவசாயிகள் சங்கம்: பட்டா ஓடை இல்லை, அரசு ஓடை என்று தான் உள்ளது. மனுதாரரை அழைக்காமல் எப்படி கூட்டம் கூட்டினீர்கள்.இதையடுத்து கலெக்டர் மீது நம்பிக்கை இழந்ததாக கோஷம் எழுப்பி வெளியேறினர்.இவ்வாறு விவாதம் நடந்தது.
நின்று கொண்டிருந்த அதிகாரிகள்
தேர்தலுக்கு பின் நடந்த கடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இருக்கைகள் போதிய அளவில் போடப்படவில்லை. அப்போதும் அலுவலர்கள், நிருபர்கள் நின்று கொண்டிருக்கும் நிலை இருந்தது. இந்த குறைதீர் கூட்டத்திலும் இருக்கை ஏற்பாடுகள் போதிய அளவில் இல்லாததால் அலுவலர்கள் பலர் நின்றபடியே பங்கேற்றனர்.