| ADDED : ஜூலை 07, 2024 11:43 PM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஒரு துளி அதிக பயிர்' திட்டத்தில் ஆயிரம் எக்டேர் பொருள் இலக்கும், ரூ.3 கோடி இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவித மானியத்துடன் அதிக பட்சமாக 2 எக்டேர், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்துடன் அதிக பட்சமாக 5 எக்டேர் வரை நுண்ணீர் பாசனம் அமைக்க முடியும்.இதில் பாதுகாக்கப்பட்ட குறுவட்டங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் மானியம், நீர் சேமிப்பு அமைப்புகள் நிறுவ ஒரு கன மீட்டருக்கு ரூ. 125 என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.மேலும் புதிய ஆழ்துளை, திறந்த வெளி கிணறுகளில் மோட்டார் நிறுவ ரூ.15 ஆயிரம் மானியம், நிலத்தில் இருந்து குழாய்களில் பாசன நீர் கொண்டு வர அதிகபட்சம் எக்டருக்கு ரூ. 10 ஆயிரம் வரை மானியம், சொட்டு நீர் பாசனத்திற்கு தானியங்கி பாசன அமைப்பு நிறுவ ஒரு எக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை அலுவலர்களை அணுகலாம், என்றார்.