| ADDED : ஏப் 20, 2024 04:50 AM
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதி 1680 ஓட்டுச்சாவடிகளில் 72.29 சதவீதம் ஓட்டுப்பதிவானது. விருதுநகர் லோக்சபா தொகுதியில் நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. முன்னதாக அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் மாதிரி ஓட்டுப்பதிவுகள் நடத்தப்பட்டன. விருதுநகர் கூரைக்குண்டு அரசு துவக்கப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் ஓட்டளித்தார். மாற்றுத்திறனாளிகள், தள்ளாடும் முதியவர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஓட்டளித்தனர். இத்தொகுதியில் 15 லட்சத்து ஆயிரத்து 942 வாக்காளர்கள் உள்ளனர். 1680 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 8187 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணிபுரிந்தனர். 4066 ஓட்டுபதிவு இயந்திரங்களும், 2033 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2202 விவிபேட் இயந்திரங்கள் தேர்தல் பணிக்காக ஓட்டுச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் 156 மண்டல குழுக்களும், 54 தேர்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுக்களும், 54 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 6 வீடியோ கிராபர்களும், 6 வீடியோ கண்காணிப்பு குழுக்களும், 6 கணக்கு குழுக்களும் பணியில் ஈடுபட்டனர். ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும் தேவையான இடங்களில் சாமியானா பந்தல் வசதிகளும், சாய்தள வசதி போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மத்திய பாதுகாப்பு படை, மாநில போலீஸ் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேர்தல் அலுவலர் ஜெயசீலன் கே.வி.எஸ்., பெண்கள் நடுநிலைப் பள்ளி, வே.வ.வன்னியப் பெருமாள் கல்லுாரி, திருமங்கலம் தொகுதியில் உள்ள கள்ளிக்குடி மேலக்கோட்டை ஊராட்சி துவக்கப் பள்ளி, சிவரக்கோட்டை ஊராட்சி துவக்கப்பள்ளி, திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள திருநகர் சி.எஸ்.இராமாச்சாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட ஓட்டுச்ச்சாவடிகளை ஆய்வு செய்தார். சாத்துார் தொகுதியில் உள்ள பதற்றமான ஓட்டுச்சாவடியான படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளி, வெங்கடாசலபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் பெண்களால் நடத்தப்பட்டு வரும் ஓட்டுச்சாவடியையும் பார்வையிட்டார். 2019 லோக்சபா தேர்தலில் 72.41 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் 0.12 சதவீதம் குறைவாக ஓட்டு பதிவாகி உள்ளது. மாலை 6:00 மணிக்கு தேர்தல் முடிந்ததும் அனைத்து ஓட்டு பதிவு இயந்திரங்கள் பெட்டிகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அவைகள் வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. லோக்சபா எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டு இன்று காலை கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட உள்ளது.