| ADDED : ஆக 09, 2024 02:48 AM
ஸ்ரீவில்லிபுத்துார்,:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா மம்சாபுரத்தைச் சேர்ந்த சிங்காரவேல், ஜவுளிக்கடை நடத்தி வந்தார். அவரது மகன் வீரபிரபுக்கு 25, மைத்துனர் லட்சுமணபெருமாள் மகள் காயத்ரியை 22, திருமணம் செய்து வைத்தார். இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வீரபிரபு 2021 பிப்.,22 இறந்தார். மம்சாபுரம் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர்.கணவரை இழந்த காயத்ரி தந்தை வீட்டில் வசித்து வந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு பிறகு 2021 ஜூன் 24 தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு சம்பவங்களை மம்சாபுரம் போலீசார் மறு விசாரணை செய்தனர்.போலீஸ் விசாரணையில் காயத்ரியும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் கிருஷ்ண விக்னேஷ் 24, என்பவரும் பள்ளியில் படிக்கும் காலம் முதல் காதலித்து வந்ததும், திருமணத்திற்கு பிறகு காயத்ரியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும், இதனால் வீர பிரபு தூங்கும் போது கள்ளக்காதலர் கிருஷ்ண விக்னேஷை வீட்டிற்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து கொலை செய்தததும், இதை தற்கொலை செய்வதற்கு முன்பாக காயத்ரி தந்தையிடம் தெரிவித்ததும் தெரிய வந்தது. கிருஷ்ண விக்னேஷை கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது. கிருஷ்ண விக்னேஷுக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.