| ADDED : ஜூலை 01, 2024 04:16 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டூவீலர் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுக்க இரவு ரோந்தை அதிகரிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்டத்தில் அருப்புகோட்டை, விருதுநகர், காரியாப்பட்டி, சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் ஆகிய நகர் பகுதிகள், அதனை சுற்றிய ஊரகப்பகுதிகளில் டூவீலர்களின் எண்ணிக்கை, பயன்பாடு அதிகரித்துள்ளது. காலை, மாலை நேரங்களில் நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக டூவீலரில் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.இந்நிலையில் வீட்டின் வாசலில் டூவீலரை இரவு நிறுத்தி விட்டு மறுநாள் காலையில் பார்க்கும் போது டூவீலர் திருடுபோவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது. திருட்டு டூவீலர்களை வைத்து செயின் பறிப்பு, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண முடியாமல் போலீசார் திண்டாடுகின்றனர்.மேலும் நகர் பகுதியில் திருடிய டூவீலர்களை ஊரகப்பகுதிகளிலும், மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து விடுகின்றனர். இவற்றை உதிரிபாகங்களாக பிரித்து விற்பனை செய்து விடுவதால் எளிதில் கண்டறிய முடிவதில்லை. திருடர்கள் பிடிபட்டால் மட்டுமே வேறு எங்கெல்லாம் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவரும்.இதனால் டூவீலரை பறிகொடுத்தவர்கள் மாதக்கணக்கில் காத்திருந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே மாவட்டத்தில் டூவீலர் திருட்டு சம்பவங்களை தடுக்க இரவு ரோந்து, சோதனையை அதிகரிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.