| ADDED : ஜூன் 06, 2024 05:51 AM
ராஜபாளையம், : கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை முழுமையாக செலுத்திய பின் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், மம்சாபுரம், தேவதானம் பகுதிகளில் நீர் வரத்து காரணமாக கரும்பு சாகுபடி அதிகம். எனவே இங்கு சாகுபடியாகும் கரும்புகளை விருதுநகர், தென்காசி மாவட்ட எல்லையில் செயல்பட்ட தனியார் கரும்பு ஆலைக்கு ஒப்பந்த முறையில் வழங்கி வந்தனர்.இந்நிலையில் விவசாயிகளின் 2018- -19 ம் ஆண்டிற்கான கரும்பு அனுப்பியதில் வட்டியுடன் நிலுவைத் தொகை ரூ.30 கோடி இதுவரை நிலுவையில் இருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஆலை நிர்வாகம் சார்பில் விவசாய பிரதிநிதிகளை அழைத்து அசல் தொகையான ரூ.21 கோடியில் பாதியை விவசாயிகள் கணக்கில் செலுத்தியுள்ளனர்.மீதமுள்ள தொகையை தவணை முறையில் செலுத்துவதாக கூறியதை அடுத்து அடுத்த வருடத்திற்கான ஆலை திறப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அசல் தொகை முழுவதையும் விவசாயிகளிடம் வழங்கிய பின் ஆலையை செயல் படுத்த வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா: இத்தனை ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் அதிகமான இரண்டு மாவட்ட விவசாயிகள் கரும்பை அனுப்பிவிட்டு அதற்கான பணம் வராததால் பல்வேறு இன்னல்களில் தவித்து வருகின்றனர்.தற்போது அசல் தொகையில் ரூ. 10.5 கோடி மட்டும் வழங்கியுள்ள நிலையில் ஆலை இயக்கத்திற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளனர். இது கரும்பு விவசாயிகளிடையே மகிழ்ச்சி எனினும் அசல் தொகை நிலுவையையும் முழுவதுமாக வழங்கிய பின் ஆலையை இயங்க அனுமதிக்க வேண்டும்.