உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் படந்தால் ரோடு சந்திப்பில் பாலம் இல்லாததால் மக்கள் அவதி

சாத்துார் படந்தால் ரோடு சந்திப்பில் பாலம் இல்லாததால் மக்கள் அவதி

சாத்துார்: சாத்துார் நான்கு வழி சாலை படந்தால் ரோடு சந்திப்பில் பாலம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சாத்துார் நான்கு வழி சாலை படந்தால் ரோடு சந்திப்பில் பாலம் கட்டுவதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு மண் பரிசோதனை செய்யப்பட்டது.ஆனால் இன்று வரை இந்த பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்படவில்லை. நகரிலும் கிராம பகுதியிலும் நாளுக்கு நாள் இருசக்கர மற்றும் கனரக வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இங்கு பாலம் கட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். நகரின் மேற்கு பகுதியில் தாயில்பட்டி, சுப்பிரமணியபுரம், சல்வார் பட்டி, ஊஞ்சம்பட்டி, வடமலாபுரம், படந்தால் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சாத்துார் நகருக்குள் வர நான்கு வழிச்சாலை படந்தால் ரோடு சந்திப்பை கடந்தாக வேண்டிய நிலை உள்ளது.மேலும் தாயில்பட்டி பகுதியில் அதிகளவில் பட்டாசு தொழிற்சாலையில் உள்ளன. சாத்துாரில் இருந்து பலர் பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்கின்றனர். பட்டாசு ஆலைக்கு வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் வாகனங்களும் பள்ளிக்கூட வாகனங்களும் நான்கு வழிச்சாலை படந்தால் ரோட்டை அடிக்கடி கடக்க வேண்டிய நிலை உள்ளது.இதனால் காலை முதல் மாலை வரை இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. வாகனங்கள் எதிரெதிர் திசையில் வரும் போது விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு டிராபிக்கை கண்கானித்து வருகின்றனர். கடும் கோடை காலத்தில் அவர்கள் வெயிலில் நின்று பணி புரிய வேண்டிய நிலை உள்ளது. போலீசாரின் கண்காணிப்பை மீறியும் சிறு சிறு விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.சாத்துார், சுற்று கிராம பகுதியில் வசிக்கும் மக்கள் நான்கு வழிச்சாலை படந்தால் ரோடு சந்திப்பில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.இதற்காக மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு பலர் வழக்குகளையும் சந்தித்துள்ளனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாத்துார் நான்கு வழிச்சாலை படந்தால் ரோடு சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை