உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தனியார் மயமாக்கல் நோக்கி அரசு போக்குவரத்து கழகங்கள்

தனியார் மயமாக்கல் நோக்கி அரசு போக்குவரத்து கழகங்கள்

விருதுநகர் : தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் துாய்மை பணியாளர், கேண்டீன் டெண்டர், டிரைவர், நடத்துநர், பெயிண்டர், பராமரிப்பாளர் பணியிடங்கள் தனியார் மயமாக்கலை நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறை, குளியலறைகள் இன்றி பற்றாக்குறை சூழல் நிலவுகிறது. இங்கு நிரந்தரமாக இருந்த துாய்மை பணியாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு தற்போது ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர். அந்தந்த பணிமனை நிர்வாகத்தால் நடத்தப்பட்ட கேண்டீனில் சமையல்காரர், உதவியாளர்கள் பணியாற்றினர்.நிர்வாக செலவுகளை மிச்சம் செய்கிறோம் என பல பணிமனைகளில் கேண்டீன் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டது. இவற்றை அரசியல்வாதிகளின் பின்புலம் பெற்றவர்கள் எடுத்து நடத்தி வருகின்றனர். தரமான உணவு தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. கேண்டீனிற்கு வராத பணியாளர்கள் பெயர்களை வருகை பதிவேட்டில் தாங்களாகவே குறிப்பிட்டு கணக்கு காட்டும் நிலை தொடர்கிறது. இதில் பணியாற்றிய நிரந்த பணியாளர்களும் மாற்றப்பட்டு ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெயிண்டர், பராமரிப்பு பணியாளர்கள் பணியிடங்களிலும் ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு இத்தனை பஸ்களுக்கு பெயிண்டிங், வாகன பாகங்கள், டயர்கள் மறு சீரமைப்பு செய்தால் இவ்வளவு சம்பளம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. டிரைவர், நடத்துனர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு மகளிர் இலவசமாக பயணம் செய்யும் பஸ்களில் பணிபுரிகின்றனர். அரசு போக்குவரத்து கழகங்களில் நிர்வாகம் தவிர இதர பணியிடங்கள் தனியார் மயமாக்கல் செய்யப்பட்டு வருவதால் நிரந்தர பணி வருங்காலத்தில் கிடையாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொன்றாக தனியாருக்கு தாரை வார்ப்பது தொடர்கிறது. இதனால் இளைஞர்களுக்கான நிரந்தர வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. அரசு பஸ்கள், நிர்வாகம் தவிர மற்ற எல்லாவற்றையும் தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் செவி சாய்க்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சிந்தனை
செப் 10, 2024 22:04

ஆமாம் ஆமாம் அரசு பணி என்றால் கண்டவன் எல்லாம் வருவான் எல்லா கட்சிக்காரனும் இப்படி செய்து விட்டால் நம் கட்சிக்காரனுக்கு பார்த்து கான்ட்ராக்ட் கொடுத்துக் கொள்ளலாம்


ராமகிருஷ்ணன்
செப் 10, 2024 10:42

திமுக அரசு போக்குவரத்து துறை தொடங்கியதில் இருந்து சுரண்டி சுருட்டி எந்த நேரத்திலும் திவால் ஆகும் நிலையில் இருக்கிறது. இருக்கிற மிச்ச மீதியை கான்ராட் என்ற பெயரில் தனது கட்சிகாரர்கள் மூலம் சுருட்டி வருகிறது. இனி ஓய்வு பெற்ற தொழிலாளிகளின் பென்ஷன் கூட கிடைக்காது என்று நினைக்கிறேன்.


புதிய வீடியோ